“1387 ரூபாய் அனுப்பு “

av_9_right_hand_blessing_vilva_on_head
அன்று காஞ்சீபுரம் ஸ்ரீமடத்தில் ஸ்ரீமஹா பெரியவாள் தரிசனம் தந்து கொண்டிருந்தார்கள். உடன் அணுக்கத்தொண்டர் சிலர் மட்டும் இருக்க பயத்துடன் தயங்கியபடியே சற்று ஓரமாகச் சென்று நமஸ்கரித்தேன்.

திரும்பிப்பார்த்த ஸ்ரீபெரியவாள் ” பூனா க்ருஷ்ணமூர்த்திக்கு பேப்பர் சிலவு, ஸ்டாம்ப், தபால்சிலவு நிறைய ஆறதாம். அதுக்காக ஒரு வருஷத்துக்கு மாசாமாசம் 1387ரூபாய் இவனை அனுப்பச் சொல்லு ” என்று கணீர்க் குரலில் உத்தரவிட்டார்கள்.

உடம்பும் மனசும் பதறிக்கொண்டிருந்ததால் உத்தரவானது சட்டென்று பிடிபடவில்லை.

“பூனா கிருஷ்ணமூர்த்தி… பூனா கிருஷ்ணமூர்த்தி…” என்று இரண்டு முறை அழுத்திச்சொன்னவர்களிடமிருந்து மறுபடியும் “1387 ரூபாய் அனுப்பு!” என்று ஆக்ஞை வந்தது.

“அப்படியே செய்கிறேன் ” என்று சொல்வதற்குக்கூடத் தைரியம் இல்லை. நாக்குக் குழறிக்கொண்டு தலையைத் தாழ்த்தி பலமுறை நமஸ்கரித்தேன். கையைத் தூக்கி ஆசீர்வாதம் செய்தார்கள்…

…பக்கத்தில் ஏதோ சப்தம்… கண்ணைத்திறக்கிறேன்..

“இத்தனையும் ஸ்வப்னத்திலேன்னா நடந்திருக்கு! …” வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து மணியைப் பார்த்தபோது விடியற்காலம் நாலரை ஆகியிருந்தது.

அன்றைக்குத் தேதி 15/10/2012. விடிந்தால் திங்கட்கிழமை…

“யாரை வேண்டுமானாலும் ஸ்வப்னத்தில் பார்க்கலாம். ஆனால் எங்க அண்ணாவைப் பார்க்கணும்னா அவாளே நெனைச்சு தரிசனம் தந்தால்தான் உண்டு. அதனால் பெரீவா ஸ்வப்னத்தில் வந்தால் நேரா வந்தா மாதிரின்னு எடுத்துண்டு அவா சொன்னதை செய்யணும் ” என்று ஸ்ரீசிவன் சார் சொல்லிக் கொடுத்தது நினைவுக்கு வருகிறது.

சட்டென்று விபூதியை அள்ளிப் பூசிக்கொண்டு மேற்கொண்டு செய்வதறியாது அமர்ந்திருந்தேன். மணி ஆறு அடித்தது…

“இத்தனை பெரிய ஜன ஸமூஹத்தில் பூனா க்ருஷ்ணமூர்த்தி என்பவரை எப்படித் தேடிக்கண்டு பிடிப்பது? பெரீவா உத்தரவாச்சே.. கட்டாயம் செய்துடணுமே “ என்று மனது சஞ்சலித்தது.

உள்ளுக்குள் ஒரு யோசனை. “சிவராமனிடம் கேட்கலாமே” …

விஷயத்தைக் கேட்டுகொண்டசிவராமன் ”இதோ அஞ்சு நிமிஷத்தில் சொல்றேன்” என்றார். அவரே மறுபடியும் லைனுக்கு வந்தார்.

“ஆரூரான்!பெரீவா வாக்கு ஸத்யம்! நீ கேட்ட மாதிரி பூனா க்ருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரிகள்னு ஒர்த்தர் காஞ்சீபுரத்திலேயே இருக்கார். அவரும் அவாத்து மாமியும் லிங்கப்பையர் தெருவில் வேதபவனம் என்கிற மடத்து கட்டிடத்தில் இருக்கா. அவருக்கு வயசு தொண்ணூறு இருக்கும்.

பெரீவாளின் சதாரா யாத்ரையின்போதெல்லாம் நிறைய கைங்கர்யம் பண்ணியிருக்கார். பெரீவா உத்தரவுப்படி ரொம்ப நாளா வேதபாராயணம் மடத்தில் நடத்திண்டு இருக்காராம்.
அதுக்காக எல்லோருக்கும் நிறைய தபால் போட்டுக்கொண்டே இருப்பாராம்…

அவரின் அட்ரஸ் எழுதிக்கோ… போன் நம்பரும் தரேன்.. நோட் பண்ணிக்கோ.. அவரிடமும் பேசிட்டேன்.. மறக்காமல் இன்னிக்கே பணத்தை மணி ஆர்டர் பண்ணிடு ” என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தார்.

பத்து நிமிஷத்துக்குள் எல்லாம் கிடைத்துவிட்டது.

“சீக்ரம் குளிச்சுட்டு, பெரீவா பாதுகை கிட்ட பணத்தை வைத்து நமஸ்காரம் பண்ணிட்டு அடுத்த வேலையைப் பாருங்கோ” என்றாள் என் அகத்துக்காரி.

ஸ்ரீமஹாபெரியவாள் படத்தைப் பார்த்தேன்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி… பெரீவா உத்தரவாயிடுத்தே… இத்தனை பெரிய ஜன ஸமூஹத்துக்குள் பூனா கிருஷ்ணமூர்த்தியை எப்டித் தேடப்போறோம்னு ரொம்பவும் பயந்துட்டியோ?” என்று கருணையுடன் கேட்பதுபோலிருந்தது.

தெரிஞ்சதைச் சொல்லி ரெண்டு பத்ரபுஷ்பத்தைச் சார்த்தி விட்டு பணத்தை எடுத்துக்கொண்டு தபால் ஆபீசுக்குப் .போய் பூனா க்ருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரிகளுக்கு 1387 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பினேன்.

“அப்பாடா… பெரீவா உத்தரவிட்டபடி செஞ்சாச்சு” … என்றாலும் “அது என்ன 1387 ரூபாய் கணக்கு? ” மனசு கேள்வியைப் போட்டது!…

“அது என்ன 1387 ரூபாய்?..” மனசின் கேள்விக்கு புத்தியால் பதில் சொல்லக் கூடவில்லை.

“கொஞ்ச நேரம் ஆராய்ச்சி பண்ணாமல் இருக்கியா.. நானே ஒண்ணும் புரியாமல் முழிச்சிண்டு இருக்கேன்” புத்தி தனியாகக் கழற்றிக்கொண்டது.

“சரி.. எல்லாம் பெரீவா விட்ட வழி!” என்று ஒரு மாதிரியாக மனசு மடங்கிக்கொண்டது.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது…

1990ம் வருஷம். ஸ்ரீமஹாபெரியவாள் ஸ்ரீமடத்தில் இருந்த சமயம். ஸ்ரீசந்த்ரமௌளீ ச்வரர் சன்னதிக்கெதிரில் ஸ்ரீகார்யம் நீலகண்ட ஐயர் தன் அன்றைய அலுவல்களில் மும்முரமாயிருந்தார். அருகில் அமர்ந்தபடி அவருக்கு ஒத்தாசை செய்து கொண்டிருந்தேன். ஸ்வாமி சந்நதிப் பக்கமிருந்து ஸ்ரீசந்த்ரமௌளி மாமா (ஸாமவேதி ) வேகமாக வந்தார்.

” ஏய்.. உன்னை பெரீவா உத்தரவாறது” என்றார்.
என்னால் இதை நம்ப முடியவில்லை.

“மாமா, பெரியவாளுக்கு என்னைத் தெரியாதே.. எங்க தாத்தா அப்பாவையெல்லாம்தானே தெரியும்.. சரியாகக் கேட்டுண்டுட்டேளா ?.. ஒரு சமயம் அவாளுக்கு ஏதானும் உத்தரவு பண்ணியிருக்கப் போறா?” என்று குறுக்குக் கேள்வியைப் போட்டேன்.

” ஏம்ப்பா.. எத்தனை வருஷமா பெரீவாட்ட இருக்கேன். அவா சொல்றத கரெக்டா நான் புரிஞ்சுக்க மாட்டேனா?.. உன்னைச் சொல்லிதாம்ப்பா உத்தரவாச்சு!” என்று அழுத்திச் சொன்னவர் கையோடு என்னைக் கொண்டுபோய் ஸ்ரீமஹாபெரியவாளின் சன்னதியில் ஆஜர்படுத்தினார்.

இதிலிருந்துதான் ஸ்வாரஸ்யமான கதை ஆரம்பம்…

அணுக்கத்தொண்டர் : ” திருவாலூர் ஆடிட்டர் வெங்கட்ராமையர் பேரன் இதோ நிக்கறான் “

ஸ்ரீமஹாபெரியவாள்: ” இவனா..? எனக்காக பத்தாயிரம் ரூபாய் இவன் தர்மம் பண்ணுவானான்னு கேளு !”

அணுக்கத்தொண்டர் : ” ஏம்ப்பா, நீ பெரீவாளுக்காக பத்தாயிரம் ரூபாய் தர்மம் பண்ணுவியா?”

ஆரூரன் : ” எங்கிட்டப் பணம் இல்லை. எங்க அப்பாக்கிட்ட கேட்டு வாங்கித்தரேன். “

அணுக்கத்தொண்டர் : ” இவன் படிச்சிண்டிருக்கான். அதனால தன் அப்பாட்டக் கேட்டு வாங்கித்தரேங்கறான்.”

ஸ்ரீமஹாபெரியவாள் : ” என்ன படிக்கறான் கேளு! “

அணுக்கத்தொண்டர் : (அவராகவே) “சி. ஏ படிக்கறான்”.

ஸ்ரீமஹாபெரியவாள் : ” இவன் ஏன் சி.ஏ படிக்கறான் கேளு! ” (அணுக்கத் தொண்டருக்கு இந்தக் கேள்வி புரியவில்லை )

ஸ்ரீமஹாபெரியவாள்: ” அந்தக்காலத்ல இவன் தாத்தா பெரீய்ய ஆடிட்டர்… அவர் சி.ஏ படிக்கலே… ப்ராக்டீஷனர்தான். இவன் அப்பாவும் ஆடிட்டர்தான். ஆனா tax advocate. அவா ரெண்டு பேருமே சி. ஏ படிக்காமலேயே ஆடிட்டராக முடிஞ்சுதுன்னா இவன் மட்டும் சி.ஏ படிச்சு என்ன பண்ணப் போறானாம்..?” (சிறிது நேரம் மௌனம்.. பிறகு தொடர்கிறார்கள். ) “சரி.. எப்போ படிச்சு முடிப்பான்னு கேளு !”

அணுக்கத்தொண்டர் : ” எப்போப்பா படிச்சு முடிப்பே?”

(அந்த சமயத்தில் C A Intermediate ஒரு பாதி முடிந்து அடுத்ததை முடிக்க முடியாமல் நான் தடுமாறிக் கொண்டிருந்தேன்.)

ஸ்ரீமஹாபெரியவாள் இப்படி கேள்வி கேட்டதும் அழுகை மேலிட்டது.

ஆரூரன் : “எப்போ முடிப்பேன்னு தெரீலை பெரீவா .. ரொம்ப கஷ்டமாயிருக்கு .. பெரீவா அனுக்ரஹம் பண்ணினா படிச்சு பாஸ் பண்ணிடுவேன்.”

ஸ்ரீமஹாபெரியவாள் : ” அப்டின்னா, இன்னும் நாலு வருஷத்ல பாஸ் பண்ணிடுவானா கேளு !”

ஆரூரன் : (அழுதுகொண்டு நமஸ்கரித்தபடியே) ” பெரீவா அனுக்ரஹத்ல பாஸ் பண்ணிடறேன் பெரீவா…”

ஸ்ரீமஹாபெரியவாள் : “அப்போ சரி… நாலு வருஷத்ல சி.ஏ படிச்சு பாஸ் பண்ணிட்டு அப்றமா எனக்கு பத்தாயிரம் ரூபாய் கொண்டுவந்து கொடு!”

இதற்குப் பிறகு நான் ஸத்குரு ஸ்ரீசிவன்சார் அவர்களிடம் அடைக்கலமானேன். ஒரு தாயார் தன் குழந்தையைப் பார்த்து கொள்வது போல ஸ்ரீசிவன்சார் என்னைப் பார்த்துக்கொண்டார். என்னைத் துரிசடக்கிப் படிக்க வைத்தார்.

சரியாக நான்கு வருஷம் கழித்து 1994 மே மாதம் சி.ஏ முடித்தேன்…. ஆனால், ஸ்ரீமஹாபெரியவாள் உத்தரவிட்டபடி பத்தாயிரம் ரூபாயை அவர்களிடம் என்னால் தர முடியவில்லை.

ஆமாம்.. ஸ்ரீமஹாபெரியவாள் 1994 January மாசம் சித்தியடைந்து விட்டார்கள்……

கடந்த காலச் சம்பவங்களை மனத்தால் அளைந்தபடியே அருகிலிருந்த ஸ்ரீமஹாபெரியவாள் படத்தைப் பார்த்தேன்…

“பெரீவாளுக்குச் சேரவேண்டிய பத்தாயிரம் ரூபாய்க்கு இருபத்திரெண்டு சொச்சம் வருஷத்துக்கு 3% simple interest ரூபாய் 6650/- . அதனுடன் ரூபாய் 10,000/- அசலையும் கூட்டினால் மொத்தம் ரூபாய் 16650/- அதை பன்னிரெண்டு மாசத்துக்கும் பிரிச்சால் 1387 ரூபாய் வரும் பார்..” என்று உள்மனசு சொன்னது !

“ தொழுது தூமலர் தூவித்துதித்து நின்று
அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்
பொழுதுபோக்கிப் புறக்கணிப்பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே”
– அப்பர் ஸ்வாமிகள்