நீ கும்பிடும் தெய்வம் உன்னை ஒரு நாளும் கை விடாது


ஒரு முறை எல்.சுப்ரமண்யம் [வயலின்] ஜாகிர் ஹுஸேன் [தபலா]
இவர்களுடன் கச்சேரிக்கு ஏதென்ஸ் செல்ல ஏற்பாடாகியிருந்தது.
விநாயாகராமைத் தவிர மற்ற இருவரும் முதலில் லண்டன் சென்று
ஒரு கச்சேரியை முடித்துக் கொண்டு ஏதென்ஸ் வருவதாகவும்,
விநாயகராம் நேரே இந்தியாவிலிருந்து ஏதென்ஸ் செல்வதென்றும்
ஏற்பாடு. அதன்படி விநாயகராம் முதலில் ஏதென்ஸ் சென்றார்.
அறையில் பொழுது போகாமல்,கடத்தையாவது வாசிக்கலாமென்று


பெட்டியைத் திறந்தால் பேரதிர்ச்சி! உள்ளே கடம் தூள் தூளாகிக்
கிடந்தது. வாய் விட்டு அலறிவிட்டார். “வேறு கடம் இங்இங்கே
கிடைக்காதே?” என்று நினைத்து கதிகலங்கிப் போனார்.கையும்
ஓடவில்லை…காலும் ஓடவில்லை ! சுதாகரித்துக்கொண்டு
இந்தியாவில் இருந்த மனைவிக்கு போன் செய்தார். “கடம்
உடைந்துவிட்டது: நான் இந்தியா புறப்பட்டு வந்துவிடுகிறேன்.
வேறு வழி தெரியவில்லை” என்றார் அவர் மனைவியோ”,நீங்கள்
அதைரியப்படாதீர்கள்; பெரியவா நம்மைக் காப்பாற்றுவார்!”
என்று தைரியம் சொன்னாள். ஆனால் விநாயகராம்”அது
சாத்தியமே இல்லை” என்றார். “ஏதாவது அதிசயம் நடக்கும்
பாருங்களேன்! பெரியவா மேலே நம்பிக்கையுடன் விடாமல்
பிரார்த்தனை செய்யுங்கள்..” என்று மறுபடியும் சமாதானம்
செய்தாள் மனைவி. “நீ தெரியாமல் பேசுகிறாய். இந்த இடத்தில்
பானை கூடக் கிடைக்காது. கச்சேரி எப்படிப் பண்ண முடியும்?
நான் வந்து விடுகிறேன்…” என்று அவரும் பிடிவாதம் செய்கிறார்.
அதற்கு மேல், அந்த அம்மாள், “ஒரே நாள் பொறுத்திருங்கள்.
நான் இப்பவே காஞ்சிபுரம் சென்று பெரியவாளிடம் நின்று
அழுகிறேன். எல்லாம் சரியாகி விடுமென்று நம்புகிறேன்……
நாளைக்கு போன் பண்ணுங்கள்!” என்று சொல்லிவிட்டு,
அவ்வாறே பீரியவாளிடம் போய் முறையிடுகிறார்
வருத்தத்துடன்.
“உங்களைத்தான் நம்பியிருக்கிறோம்..கைவிட்டு விடாதீர்கள்!”
என்று சொல்லிவிட்டுத் திரும்ப எத்தனிக்கையில், பெரியவா
ஒரு மட்டைத் தேங்காயை அவரை நோக்கி உருட்டிவிட்டார்.
அவருக்கு ஒன்றும் புரியவில்லை.வீடு திரும்பினாள்.
கணவரிடமிருந்து மறுபடியும் போன் வருமே!என்ன சொல்வது
என்று குழம்பினாள் வித்வானோ அதற்குள் லண்டனுக்கு போன்
செய்து, நிலைமையை எடுத்துச் சொல்லி, “நான் ஊர் திரும்பப்
போகிறேன்!” என்று சொன்னார். “அதை மட்டும் செய்துவிடாதீர்கள்.
கச்சேரி நடக்கவில்லையென்றால் மீண்டும் ஏதென்ஸ் பக்கம் வர
முடியாது. ஏதாவது வாத்தியத்தை வாசியுங்கள்,பயப்படாதீர்கள்!”
என்று எச்சரித்தார்கள். அதற்கு மேல் ஊருக்கும் திரும்ப முடியாமல்
பெரியவா படத்தை எடுத்து வைத்துக் கொண்டு சுற்றிச் சுற்றிப்
பிரார்த்தனை பண்ணிக் கொண்டே இருந்தார் விநாயகராம்.
அடுத்த நாள் லண்டன் சென்றிருந்தவர்கள் ஏதென்ஸ் திரும்பினர்.
அவர்கள் கையில் ஒரு பெரிய மூட்டை இருந்தது. அது என்ன
என்று ஆச்சரியத்துடன் பார்த்திருந்த விநாயகராமுக்கு தன்
கண்களையே நம்ப முடியவில்லை. மூட்டையைப் பிரித்தால்
அதற்குள் ஒரு கடம் இருந்தது!. அமிர்தமே கிடைத்ததுபோல்
துள்ளிக் குதித்தார் வித்வான். எப்படி இது சாத்தியமாயிற்று.?
ஒரு ஆங்கிலேயர் விநாயகராமுக்கு எழுதிக் கொடுத்திருந்த
கடிதத்தை நீட்டி, “இதைப் படித்துப் பார்!” என்றார் சுப்ரமணியம்.
“நீ கும்பிடும் தெய்வம் உன்னை ஒரு நாளும் கை விடாது!” என்ற
வரிகள் கடிதத்தின் கடைசியில் எழுதப்பட்டிருப்பது அவரது
கண்களில் பட்டன. அதை மீண்டும் படித்தார். மறுபடியும்
அழுதார்.
“நாம் கும்பிடும் தெய்வம், பெரியவா மீது எனக்கே கொஞ்சம்
அவனம்பிக்கை இருந்தபோது, எவனோ ஒருவன் எவ்வளவு
நம்பிக்கையுடன் பேசுகிறான்!” என்று வியந்தார்.
நடந்தது இது தான்.
கடம் இல்லாமல் விநாயகராம் தவித்ததைப் பார்த்த மற்ற
வித்வான்கள் லண்டனில் பலரிடமும்,”கடம் கிடைக்குமா?”
என்று கேட்டிருக்கிறார்கள். அப்போது ஒருவர் குறிப்பிட்ட
ஓர் ஆங்கிலேயர் இருக்குமிடம் சொல்லி…அவரிடம்
சில இந்திய இசைக் கருவிகள் இருக்கின்றன.போய்ப்
பாருங்கள் என்று சொல்லவே,அங்கே போயிருக்கிறார்கள்.
வீட்டுக்குள் நுழைந்தவுடன் அவர்கள் கண்ணில் பட்ட கடம்
தெய்வமே தரிசனம் கொடுப்பது போல் இருந்தது.உடனே,அதை
வைத்திருந்தவரிடம் நிலைமையை விளக்கி,”தயவு செய்து
இதை கொடுத்து உதவ வேண்டும்!” என்று வேண்டினர்.
கேட்ட விலையைக் கொடுப்பதாகவும் சொன்னார்கள். அந்த
ஆங்கிலேயரோ, “நான் ஒருவருக்கும் கொடுக்க மாட்டேன்.
இதை ஒருவர் அவரது ஞாபகார்த்தமாக எனக்கு அன்பளீப்பாகக்
கொடுத்தார். அவரிடம் நான், “இதை எக்காரணம் கொண்டும்
ஒருவருக்கும் தரமாட்டேன்: பத்திரமாகப் பாதுகாப்பேன்!”
என்று வாக்குக் கொடுத்திருக்கிறேன், போய் வாருங்கள்!”
என்று கண்டிப்பாக மறுத்துவிட்டார்.
“யாரப்பா அவர்?” என்று ஆவலுடன் கேட்க,”இந்தியாவிலிருந்து
விநாயகராம்..” என்று வாக்கியத்தை முடிக்கவில்லை.
“ஐயா! அதே விநாயகராம்தான் இப்போது ஏதென்ஸில்
எங்களுடன் கச்சேரி செய்ய ஒரு கடம் இல்லாமல்
தவித்துக் கொண்டிருக்கிறார்.அவருக்கு உங்கள் உதவி
இப்போது மிக மிக முக்கியம்!” என்று விளக்கினார்கள்.
உடனே கடத்தையும் கூடவே விநாயகராமுக்கு ஒரு
கடிதத்தையும் ஆங்கிலேயர் அவர்களிடம் கொடுத்துவிட்டார்.
“உங்களுக்கு வேண்டும் என்று தெரிந்ததால் நான் கடத்தை
கொடுக்காமல் இருக்க முடியவில்லை!” என்று அதில்
அடிக்கோடு இட்டிருந்தார்.
எம்.எஸ்.அம்மாவுடன் 18 வருடங்களுக்கு முன் விநாயகராம்
லண்டனில் கச்சேரி செய்யப் போனபோது அந்த ஆங்கிலேயருக்கு
அன்பளிப்பாகக் கொடுத்த கடம் இப்போது தக்க சமயத்தில்
பெரியவா அனுக்கிரகமாக அவர் கைக்கு வந்தது. எத்தனையோ
ஆண்டுகளுக்கு முன்பே தன் பக்தன், இப்படி ஒரு நாள் உடைந்த
கடத்தைப் பார்த்து மனமுடைந்து போய்விடுவாரென்று
அதற்குரிய ஏற்பாட்டை பெரியவா செய்து வைத்திருந்தாரா!
நமது ஆச்சரியம் அடங்குவதில்லை. இவை நமக்குப்
புரியாத அமானுஷ்யமான தேவரகசியங்கள்