சித்தம் போக்கு..சிவன் போக்கு!

தேனம்பாக்கம் சிவாஸ்தானம்..பெரியவா முகாம்.
பெரியவா ஜன்னல் வழியாக பக்தர்களுக்கு தரிசனம் தரும் இடம். பெரியவாளுக்கு அருகில் அணுக்கத் தொண்டர்கள். அவர்களில் ஒருவன் என் மருமான் நாராயணன். ”நாராயணா” என இயல்பாகவே பெரியவா குரல் ஒலிக்கிறது. ”ஏன் ”என்ற பதில் குரம் என் மருமான் நாராயணனிடமிருந்து வருகிறது. விஷ்ணுபுரம் சாது நாராயணன் என்றால் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.
”அட..நீ இங்கேதான் இருக்கியா?” என்று புன்முறுவலுடன் பெரியவா கேட்கிறார்கள்.
”உனக்கு இதயம் பற்றித்தெரியுமா?” ”கடிகாரம் மாதிரி அது டக்..டக் என்று அடித்துக் கொள்கிறதே கன கணக்காய்! அது எப்படி?”
பெரியவா எந்தப் பேச்சுக்கு அடி போடுகிறார் என்று தெரியாமல் அவன் மௌனம் சாதிக்கிறான்.
”கடிகாரத்தைப் பார்த்து இதயம் ஓடுகிறதா? அல்லது இதயத்தைப் பார்த்து கடிகாரம் கண்டுபிடித்தார்களா?”
”கடிகாரத்தில் பல்சக்கரம் பழுதானால் துடிப்பு தடுமாறிப்போகிறது;அது போல் இதயத் துடிப்பும் அப்படி தடுமாறுவது உண்டாமே..உனக்குத் தெரியுமோ?” ”ஆமாம்..இப்படி ஒரு இதயக் கோளாறு ஏற்படுவதுண்டு என்று கேள்விப் பட்டிருக்கிறோம்”..பலர் சேர்ந்து கோரஸாகக் குரல்!
அப்போதைக்கு அந்தப் பேச்சு நின்றுவிடுகிறது.
நாராயணன் சென்னை செல்லும் பஸ்ஸில் அமர்கிறான்..பக்கத்தில் அமர்பவர் ”சென்னைக்கா?” என்று கேட்கிறார்.
கண்டக்டர் வரும்போது இவனுக்கும் சேர்த்து டிக்கட் வாங்க முனைகிறார். இவன் ஏன் அவர் தனக்காக வாங்க வேண்டுமென மறுத்துவிடுகிறான்.
;;நான் ஒரு இதய டாக்டர்..பெரியவா உங்களிடம் பேசியதைக் கேட்டேன். நீங்கள் சொன்னால் நான் ECG கருவியோது வந்து பெரியவா அநுமதி தந்தால் முறைப்படி டெஸ்ட் செய்கிறேன்” என்றார்.
”சித்தம் போக்கு சிவன் போக்கு” என நினைத்து மறுத்து விடுகிறான் நாராயணன்.
ஆனால் டாக்டர் விடுவதாயில்லை.”.நாம் முயன்று பார்க்கலாமே” என்று சொல்லி , மறு நாள் கருவியோடு வந்து விடுகிறார்.
அன்று குருவாரம்..என் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நிற்கிறது. காரில் வந்த டாக்டரை எனக்கு அறிமுகம் செய்து வைத்து”புறப்படு” என்கிறான் நாராயணன்.


”எங்கே”
”எங்கே..பெரியவா தரிசனத்துத்தான்!”
கரும்பு திங்க கூலியா?
உடனே புறப்படுகிறேன்.
நாராயணன் அணுக்கத் தொண்டர்களில் ஒருவனாகக் கலந்து, மேற்படி விஷயத்தை அவர்களிடம் சொல்கிறான்.
”அதெல்லாம் முடியாது, அன்று ஏதோ சொன்னார் என்று நீ பாட்டுக்கு அழைத்து வந்தால், நாங்கள் பாட்டு வாங்கிக் கட்டிக் கொள்ளமுடியாது” வேண்டுமானால் நீயே போய் சொல்லிக்கொள்”
நாராயணன் ஒன்றும் பேசாமல் எங்கள் அருகில் வந்து நிற்கிறான்.
தரிசனம் கொடுக்க ஜன்னல் அருகில் வந்த பெரியவா”இன்னிக்கி வெங்குடி டாக்டர் வருவார் இல்லையா குருவாரமாச்சே”என்று கேட்கிறார்.
”வருவார்ன்னுதான் நினைக்கிறேன்”
”அதெப்படி? நான் வரச் சொன்னதாக அவருக்குச் சொல்லி அனுப்பு”!
பெரியவா சொன்ன சில நேரத்தில் டாக்டர் வெங்குடி தாமாகவே வந்துவிடுகிறார்!
திரென்று பெரியவா”நாராயணா.. யாரையோ கூட்டிக் கொண்டு வந்திருக்கியே.. அவர் யாரு?”
”ஒரு டாக்டர், என் மாமா எல்லாருமாக வந்திருக்கோம்…
”அப்படியா? அவரை வரச் சொல்…” தொண்டர்கள் என்னை துரத்தாத குறையாய் என்நை ஓரம் கட்டுகிறார்கள்.
”யாரையும் தடுக்காதே”
உடனே எல்லாரும் வரிசையில் நகர்கிறோம்.
”பக்கவாத்யக் காரன் போல் உன் கையில் என்ன அது..கருவி?”
”ECG கருவி அன்று பெரியவா பேசியதைக் கேட்டு எடுத்து வந்திருக்கேன்”
கருவியை ஜன்னலில் வைத்து ரப்பர் குழாயை நீட்டுகிறார் டாக்டர்.
”ஒத்தரும் தொடாமல் நானே வெச்சுக்கலாமா?”
டாக்டர் எப்படி பசையை ஒட்டிக் கொள்ளவேண்டும் என்று சொல்ல அது போலேயே செய்கிறார் பெரியவா..
பெரியவா பொருத்திக் கொண்டதும் ECG கருவியை இயக்குகிறார் டாக்டர்.
”பெரியவா வயசுக்கு ஏற்ப இதயத்துடிப்பு சரியாக இருக்கு”
”அது நீ சொல்லித்தான் எனக்குத் தெரியணுமா?”
டாக்டர் உடனே கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்.
”சிலசமயம் பல்ஸ் மிஸ் ஆகிறது என்கிறாளே.. அது என்னது?”
”இரண்டு, மூன்று பல்ஸ் தப்பினால் ஒண்ணும் இல்லை”
”இதிலிருந்து என்ன தெரிகிறது?.. எது மிஸ் ஆனாலும்.. நாம் மிஸ் ஆகாமல் பார்த்துக் கொள்ள ஒருத்தன் இருக்கான் இல்லையா”
”உடம்புக்கு ஒன்றும் இல்லையே…உடம்பைப் பார்த்துக் கொள் என்றெல்லாம் சொல்கிறோம்; யார் உடம்பை..யார் பார்த்துக் கொள்றது? உயிர் பிரிந்தால் உடம்பைப் பார்த்துக் கொள்ள முடியுமா?உடம்பையும் உயிரையும் பார்த்துக் கொள்கிறவன் அவன்! அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது என்கிறோமே…அவன்தான் பெரிய வைத்யன், வைத்யோ நாராயண ஹரி: என்கிறோமே அதனால்தான்.உடம்புக்கு உடம்பு வராமலும் பார்த்துக் கொள்வான்;உடம்பே ..வராமல் ..மறு ஜன்மா இல்லாமலும் பார்த்துக் கொள்வான்…மக்களுக்குப் பிணி வந்தால் உங்களைப் போல் டாக்டர்கள் வைத்யம் பார்க்கிறீர்கள் . அதனால் உங்கள் தொழில் புனிதமானது; அதனால் ஏழை எளியவர்களுக்கு இலவச வைத்யம் செய்யணும்” என ஒரு நீண்ட சொற்பொழிவே நிகழ்த்தினார்.
இதுதான் சித்தம் போக்கு..சிவன் போக்கோ?
ஜய ஜய சங்கரா…