உனக்கு, எப்படி இந்த பாட்டு தெரியும்?

அன்று.. தேனம்பாக்கத்தில் வெகு சிலபேர் மட்டுமே இருந்தனர். பெரியவா… கிணற்றின் பக்கத்திலிருந்து தரிசனம் கொடுத்துக்கொண்டிருந்தார்.சின்ன குயில்களின் கானமும், காக்கைகளின் எசப்பாட்டும் தவிர வேறு சத்தமில்லா நிசப்தம். “காமாட்சி… காமகோடி பீடவாஹினி..”- ஒரு பெண்மணி, மிக மதுரமாக பாடிக்கொண்டிருந்தார். அவர் அருகில், வேறொரு பெண், இடுப்பில் 3 வயது குழந்தையை வைத்தபடி பெரியவாளையே தரிசனம் செய்துகொண்டிருந்தார்.
“கமலேச சோதரி கமலாக்ஷி நாராயணி….” என்று பாடியவர், அடுத்த வரி மறந்து சற்று தடுமாறினார்…உடனே, “நாத பிந்து கலா ஸ்வரூபிணி..காத்யாயனி..”என்று, மழலையின் குரல் எடுத்துக்கொடுத்தது.. கண்ணில் நீர் பொங்க, அந்தப்பெண்மணி, கைகளாலேயே அந்த குழந்தையின் கன்னத்தை வருடி, முத்தமிட்டு, பாடலை பாடி முடித்தார்.
“யாரோட குழந்தை அது…”- பெரியவா உள்ளிருந்தபடியே கேட்டார்.
“என்னோட பையன் தான்.. பெரிவா…” – கையில் குழந்தையை வைத்திருந்தவர், சற்று தூக்கி காண்பித்தார்..


“உனக்கு, எப்படி இந்த பாட்டு தெரியும்?..- குழந்தையை கேட்டார்.
“எங்க அம்மா தினமும் பாடுவாளே….”
“சந்தோஷம்.. ” – ஒரு ஆப்பிளை எடுத்து, குழந்தைக்கு ப்ரசாதமாக கொடுத்தார்.
குழந்தையை வைத்திருந்தவருக்கு, உலகமே தனக்கு கிடைத்த ஒரு சந்தோஷம்..
அப்பொழுது, ஒரு வயதான தம்பதி, கையில் ஒரு பழ தட்டுடனும், கண்களில் மிகுந்த ஏக்கத்துடனும், பெரியவாளை நெடுஞ்சாண்கிடையாக நமஸ்கரித்தார்கள்..
“என்ன வேண்டும்..”- கண்களாலேயே கேட்டது, பரப்ரம்மம்.
“பொண்ணுக்கு நிச்சயம் பண்ணியிருக்கோம். சொந்த மாமாவையே, கல்யாணம் செய்து வைக்கிறோம்.”
“உறவு விட்டு போய்ட கூடாதுன்னா?…”
“அது மட்டும் இல்ல.. பெரிவா., வேற இடத்துல செஞ்சு வெக்க வசதியும் இல்ல…”
“சரி… என்ன வேணுமாம்?.. – கேளுடா.
“கல்யாணம்னு செஞ்சு வெக்க அடிப்படை தேவைகளுக்கு கூட பணம் இல்ல.. பெரியவா தான் ஏதாவது வழி காட்டணும்.” – கண்ணீர் மல்க நின்றனர் அந்த தம்பதியர்.
சற்று நேரம் அங்கு மிகப்பெரும் மௌனம்…”அவாள, அந்த மரத்தடில போய் கொஞ்ச நேரம் உக்கார சொல்லு.”
தம்பதியர், பெரிவாளுக்கு நமஸ்காரம் செய்து விட்டு, அழுது கொண்டே, மரத்தடிக்கு சென்று அமர்ந்து கொண்டனர்.
அதுவரை, இதை பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு, என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ள ஆவல். குறிப்பாக, கையில் குழந்தையை வைத்திருந்த அந்த பெண்ணுக்கும், பாடியவருக்கும்.
ப்ரசாதம் வாங்கிக்கொண்டு, வீடு திரும்ப நினைத்தவர்கள், அங்கேயே நின்றுவிட்டனர்..
சரியாக, பதினைந்து நிமிடம் சென்றிருக்கும்.. ஒரு கார் வந்து நிற்கும் சத்தம். அதிலிருந்து, ஒரு மார்வாடி குடும்பம் இறங்கியது..
கையில், மிக பெரிய தட்டு, அதில் ஒரு துணியில் மூடி எதையோ கொண்டு வந்தனர்.
பெரியவா முன் அதை வைத்துவிட்டு, கை கூப்பி நின்றனர்.
“என்னது?…” சைகையாலேயே கேட்டார் அனைத்தும் அறிந்த அந்த ஆதி மூலம்.
“இவருக்கு போன மாசம், ஹார்ட் ஆபரேஷன் நடந்தது..
ஆபரேஷ நல்ல படியா முடிஞ்சு இவர் குணமானா, ஒரு ஏழை பெண்ணுக்கு கல்யாணத்துக்கு உதவறதா வேண்டிண்டோம். பெரியவர், யார சொல்றீங்களோ, அவங்களுக்கு இதை அப்படியே கொடுக்கறோம்.
“அந்த மரத்தடில இருக்கறவாள, வரச்சொல்லுடா”
உத்தரவு கிடைத்தவுடன், ஓடிவந்தார்கள் அந்த தம்பதியர்.
“இதை அப்படியே அவாள எடுத்துக்க சொல்லு…” – உத்தரவிட்டார்
கொண்டுவந்தவர், பெற்றுக்கொண்டவர், இதை கண்டவர் என, எல்லாரும் கண்கள் குளமாக நின்றனர்.
அனைத்தையும் நடத்திய அந்த பரப்ரம்மம், ஆசிர்வதித்தது… “எல்லாம் அம்பாளோட க்ருபை, க்ஷேமமா இருங்கோ…”