ஹரியும் ஹரனும் ஒன்று தான்

“ஹரியும் ஹரனும் ஒன்று தான்.
ஆனா சம்பிரதாயத்தை விடக்கூடாது”.

(“பிரதோஷ காலத்திலே அஹோபில மடம் ஜீயர்
ஸ்வாமிகள், லக்ஷ்மி ந்ருஸிம்மனுக்குத்
திருவாராதனம் செய்வது வழக்கம்.
உனக்குத் தெரியுமோ?…..”)

சொன்னவர்; ராயவரம் பாலு, ஸ்ரீமடம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

ஒரு வைஷ்ணவருக்குப் பரமேஸ்வரனிடம்
எல்லையில்லாத பக்தி.திருநீறு இட்டுக் கொள்ள
வேண்டும்.என்று ஆசை.ருத்ராக்ஷ மாலை
அணிந்து கொள்ள வேண்டும் என்ற அவா!

அவ்வப்போது பெரியவா தரிசனத்துக்கு
வருவார் அவர்.

ஒரு தடவை வந்தபோது பெரியவாளிடம்
பிரார்த்தித்துக் கொண்டார்.

“ஒரு மகா பிரதோஷத்தன்னிக்கு நான் பஸ்ம
தாரணம் பண்ணிக்கணும். நிறைய ருத்ராக்ஷ மாலை
போட்டுக்கணும்.ஸ்ரீருத்ர- சமகம் சொல்லி
ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்யணும்!….
நானோ வைஷ்ணவன் .நான் இப்படியெல்லாம்
செய்யலாமா என்று பெரியவாதான் சொல்லணும்.

அவர் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுக்
கொண்டிருந்தார்கள் பெரியவா.

“பிரதோஷ காலத்திலே உங்கள் வழக்கப்படி
பன்னிரண்டு திருமண் இட்டுக்கோ.அனுஷ்டானம்
செய். லக்ஷ்மி ந்ருஸிம்மன் விக்ரஹம் அல்லது
சாளக்ராமத்துக்கு விசேஷமாகத் திருமஞ்சனம்,
திருவாராதனம் செய். அதுவே போதும். ஹரியும்
ஹரனும் ஒன்று தான்.ஆனா சம்பிரதாயத்தை
விடக்கூடாது.

“பிரதோஷ காலத்திலே அஹோபில மடம் ஜீயர்
ஸ்வாமிகள், லக்ஷ்மி ந்ருஸிம்மனுக்குத்
திருவாராதனம் செய்வது வழக்கம்.
உனக்குத் தெரியுமோ?…..”

“தன்யனானேன்” என்றார் வைஷ்ணவ பக்தர்.
சம்பிரதாய விரோதமாக எந்தச் சடங்கினையும்
செய்யச் சொன்னதில்லை பெரியவா. மாறாக,
மரபுகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது
நமது கடமை என்பதையே வலியுறுத்தினார்கள்