மகா பெரியவா எங்கேயிருக்கா?

IMG-20151019-WA0015

 

 

மதுரை மணி ஐயர் தியாகராயநகரில் ராதாகிருஷ்ணன் தெரு, ஸ்ரீ அனந்தானந்த சுவாமிகளின் பூர்வாச்ரம மாப்பிள்ளையின் இல்லம். வெளி வராந்தரத் திண்ணையில் பெரியவா அமர்ந்திருக்க, மதுரை மணி ஐயர் தேவகானம் பொழிந்து கொண்டிருந்தார்.
பெரியவா, சுளை உரிக்கப்பட்ட பெரிய சாத்துக்குடி மூடியொன்றைக் கையில் வைத்துக் கொண்டு பாட்டுக்குத் தாளம் போட்டுக் கொண்டிருந்தார்.
பாடி முடித்ததும் மதுரை மணி ஐயர், ‘இத்தனை நேரம் யார் தாளம் போட்டது?’ என்று கேட்டார். ‘பெரியவா தான் தாளம் போட்டார்’ என்று ஒருவர் கூறியதும், ‘அப்படியா! இத்தனை லயஞானத்தோட யார் அற்புதமா தாளம் போட்டுண்டிருக்கான்னு நினைச்சுண்டேன், என்ன பாக்கியம் பண்ணியிருக்கேனோ? பெரியவாளே இன்னிக்கு என் பாட்டுக்குத் தாளம் போட்டிருக்கார். பெரியவா எங்கேயிருக்கா? என்று மணிஐயர் கேட்க, ‘இதோ உன் எதிர்லதான் இருக்கேம்பா!’ என்று பெரியவா அன்பொழுகக் கூறினார்.
‘என் தெய்வத்தைத் தரிசனம் பண்ணமுடியலையே! பார்வை போயிடுத்தே… பரமேஸ்வரா, கைலாசபதே, கபாலீஸ்வரா!’ என்று கன்னத்தில் போட்டுக் கொண்டு அவர் கதறிய போது சுற்றியிருந்தவர்கள் கண்ணீர் விட்டனர்.