பெரியவா சொன்னது

பெரியவா சொன்னது அனுபவ ஸாத்யமான அநுக்ரஹ வழி

பெரியவாளுடைய பரமபக்தர் ஒருவருக்கு காது கேட்காது! புஸ்தகம் படிக்க முடியாதபடி பார்வைக் குறைபாடு! எதிரில் நிற்பவர்கள் கூட ஏதோ நிழல் மாதிரித்தான் தெரிவார்கள். அந்த வயசான பக்தருக்கு ரொம்ப தீவிரமான ஆசை ஒன்று இருந்தது. ஏக்கம் என்று கூட சொல்லலாம்.அது அவருக்கு ஒரு விதத்தில் வெறியாகவே இருந்தது.பாவம்! “சரஸ்வதி”யிடந்தானே மனக்குறையை சொல்ல வேண்டும்? பெரியவாளிடம் ரொம்ப மனஸ் உருகி வேண்டினார்.

“பெரியவா…எனக்கு ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், பகவத்கீதை, பதினெட்டு புராணங்கள் எல்லாத்தையும் படிச்சு என்னோட ஜன்மாவை கடைத்தேத்திக்கணும்….ஆனா, என்னால புஸ்தகம் படிக்க முடியாது. கண் பார்வை முக்காவாசி கெடையாது. காதால கேக்கலாம்..ன்னா காதும் கேக்கலை. நான் என்ன பண்ணுவேன்? பெரியவாதான் எனக்கு கதி”

அப்போது பெரியவாளை சுற்றி சில பண்டிதர்களும் அங்கே இருந்தார்கள். பெரியவா அவர்களிடம் “இவரோ ராமாயண, மஹாபாரதம்,புராணம் எல்லாத்தையும் படிக்கணும்ன்னு ரொம்ப ஆசைப் படறார்….கண் பார்வை செரியில்லே! என்ன பண்ணலாம்?” சர்வஞ்யத்வம் என்பதின் முதல் தகுதியே தனக்கு எல்லாம் தெரிந்தும், அதைப் பற்றி கொஞ்சங்கூட சட்டை செய்யாமல் [ஆஞ்சநேய ஸ்வாமி மாதிரி] மற்ற பேருக்கு முக்யத்வம் குடுப்பதுதான். பண்டிதர்களுக்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை. பெரியவாளே சொன்னார்……

“நைமிசாரண்யம்ன்னு ஒரு க்ஷேத்ரம் இருக்கு தெரியுமோ?”….

“தெரியும்”

“அங்க என்ன விசேஷம்?”

“அங்கதான் ரிஷிகள்ளாம் புராணங்கள் கேட்டா……”

“புராணங்களை எழுதினது யாரு?”

“வ்யாஸர்….”

“வ்யாஸாச்சார்யாள் புராணங்கள் எழுதின எடம்ன்னு ஒரு ஸ்தலம் இருக்கு. “வ்யாஸகத்தி” ன்னு பேரு!…..”

பண்டிதர்களுக்கோ ஆச்சர்யம்! அவர்களுக்கும் இது புது விஷயமாக இருந்தது. நைமிசாரண்யம் போய்விட்டு வந்தவர்களுக்கு கூட இந்த இடம் பற்றி தெரிந்திருக்கவில்லை! ரொம்ப நுணக்கமான விஷயங்கள் கூட பெரியவாளுக்கு தெரியும்.

பக்தரை அருகில் அழைத்து “குடும்பத்தோட நைமிசாரண்யம் போயி, கொஞ்சநாள் அங்க தங்கு! வ்யாஸர் புராணங்கள் எழுதின எடத்ல விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணு! அப்புறம் ஒனக்கே எல்லாப் புராணங்களும் மனஸ்ல ஸ்புரிக்கும் !…”

நிச்சயமாக அந்த பக்தருக்கு ஸ்புரித்திருக்கும். பெரியவா சொன்னது அனுபவ ஸாத்யமான அநுக்ரஹ வழி!