பெரியவா சொன்னது

periyava_kalki_19781பெரியவா சொன்னது:

கோயில்களும் அவற்றைச் சார்ந்த கலைகளும் ஓங்கி வளர்ந்திருந்த நாட்களில் நம் தேசம் எப்படி இருந்தது என்பதற்கு மெகஸ்தனிஸ் ஸர்டிபிகேட் கொடுத்து இருக்கிறான். இவை எல்லாம் மங்கிப் போயிருக்கிற இன்று தேசம் இப்படி இருக்கிறதென்பதையே கண்கூடாகவே பார்க்கிறொம். எங்கு பார்த்தாலும் பொய்யும், சஞ்சலமும், கலப்படமும், அதர்மமும் மிகுந்துவிட்டன. இவை நிவர்த்தியாக வழி ஒன்றுதான்; பழையகாலத்தைப்போல் கோயில்களை சமூக வாழ்க்கையின் மையமாக்கிவிட வேண்டும். அன்றுபோல் இன்றும் தெய்வ சம்பந்தமான பழமையான கலைகளை வளர்க்க வேண்டும்.

ஆபீஸ் கட்டிடங்கள், காட்டேஜ்கள் எல்லாம் இப்போது பல க்ஷேத்திரங்களில் ஏராளமாக முளைத்துவிட்டன. தெய்வ சம்பந்தமற்ற பல காரியங்கள் நடக்கின்றன. இது சாந்நியத்தைப் பாதிக்கிறது. ஏதோ எட்டாக் கையில் இருக்கிற கோயில்களில்தான் விச்ராத்தியான சூழ்நிலை நிலவுகிறது. காட்டேஜ்களும், சுற்றுலா கோஷ்டிகளும் பக்தியைவிட பொழுதுபோக்கை அதிகப்படுத்துகின்றன.

சின்னஞ்சிறிய சூஷ்மமான தர்மங்களை எல்லாம் மறந்துவிட்டோம். நமக்கு உணவு தருபவனுக்கு நல்லபடி நிவேதனம் நடக்கவேண்டும். நமக்கு உடை தருபவனுக்கு நல்ல வஸ்திரம் இருக்கவேண்டும். இப்போது ஓர் ஊரில் யார் அழுக்குத் துணிகட்டிக் கொண்டிருக்கிறான் என்றால் அது ஸ்வாமிதான். நம் ஊர் கோயில் ஸ்வாமியின் வஸ்திரம் சுத்தமாயிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்திவிட்டோமானால், நம்மனதின் அழுக்கு போய்விடும்.