பிரஸ்தான த்ரயம்

IMG-20151025-WA0010[1]பெரியவா சரணம்

மஹா பெரியவாவுக்கு கைங்கர்யம் பண்ணின பட்டாபி சிலிர்ப்புடன் கூறுகிறார்:

ஒரு நாள், திருநெல்வேலி ஜில்லா, இலஞ்சி கிராமத்துல இருந்து 65 வயசுப் பெரியவர் ஒருத்தர் வந்தார். இரண்டு சாகுபடி செய்யும் அளவுக்கு நிலபுலன்கள் அவருக்கு! தமிழ் மீது அலாதிப் பிரியம்! ஆனாலும் சமஸ்கிருதமும் கத்துண்டாராம்!

பகவத்கீதை, உபநிஷத் வேதம் இந்த மூணையும் ‘பிரஸ்தான த்ரயம்’னு சொல்லுவா. ஆச்சார்யாள் இதற்கு பாஷ்யம் கூட செய்திருக்கிறார். முழுக்க முழுக்க அத்வைத கருத்துகளை விவரிக்கிற பாஷ்யம் அது!

அதையெல்லாம் தமிழ்ல அப்படியே கவிதையா எழுதி, புஸ்தகமா பிரிண்ட் செய்து எடுத்துண்டு வந்திருந்தார் அந்தப் பெரியவர். பெரியவாளை நமஸ்காரம் செய்துட்டு , ‘இந்தப் புஸ்தகத்தை ஐயா தான் வெளியிடணுமுங்க’ என்று பெரியவாளைக் காட்டிச் சொன்னார்.

உடனே பெரியவா, ‘அவரை முன்னால வரச் சொல்லுடா’ன்னார். அவரும் வந்து நின்னார். ‘ஏ.சி. ஹால்ல, பெரிய பெரிய மினிஸ்டர்ஸ் எல்லோரையும் கூப்புட்டுன்னா, புஸ்தகத்தை வெளியிடணும்? எங்கிட்ட என்ன இருக்கு? சொல்லுடா பட்டாபி, அவர்கிட்ட!ன்னார்.

அதற்கு அந்தப் பெரியவர், ‘அதென்னங்க அப்படிச் சொல்லிட்டீங்க…! ஐயாகிட்ட தான் எல்லாம் இருக்கு. எனக்கு ஐயா வெளியிட்டாப் போதும்’ என்றார்.

அதைக் கேட்டு பெரியவா லேசா சிரிச்சுண்டார், ‘இதை என்ன செய்யப் போறீங்க?’ன்னு அவரையே கேட்டார். இப்படியொரு புஸ்தகம் வெளியிட்டு அந்தத் திருநெல்வேலி பெரியவர் நஷ்டப்பட்டுக்கூடாதேங்கிற கவலை பெரியவாளுக்கு!

‘ஐயாவைப் பார்க்க வர்றவங்க வட்டத்துல… தெரிஞ்சவங்க கிட்ட கொடுக்கணும்னுதான் அச்சுப் போட்டேன்’னார் அந்தப் பெரியவர். ஒரு நிமிஷம் யோசிச்ச பெரியவா, ‘புஸ்தகத்துக்கு விலைன்னு ஒண்ணு வைக்க வேணாமா? பத்து ரூபானு விலை வெச்சுடுங்கோ!ன்னார்.

அந்தப் பெரியவருக்கு சந்தோஷம் தாங்கலை. அப்படீன்னா, புஸ்தகத்தை பெரியவா ஏத்துண்ட மாதிரி தானேன்னு ஒரே பூரிப்பு அவருக்கு!

ஒரு புஸ்தகத்தை எடுத்துண்டு வந்து, மஹா பெரியவாளோட திருப்பாதத்துல சமர்ப்பித்தார். உடனே பெரியவா, ‘ஒரு பத்து ரூபா இருந்தா குடுடா, பட்டாபி!ன்னார் குழந்தை மாதிரி!

அந்தக் கிராமத்து பெரியவர் பதறிட்டார், ‘ஐயாகிட்டேர்ந்து பணம் வாங்கறதா? அது மகா பாவம். வேணாம் வேணாம்’னார். அதுக்குள்ளே பெரியவா என்னிடம், ‘உங்ககிட்ட ஏதுடா பணம்? அதுவும் உன்னண்டை போய்க் கேட்டேனே! நான்னா உனக்கே பணம் தர வேண்டியிருக்கு’!ன்னு சிரிச்சுண்டே சொன்னார்.

அப்ப, எதிர்ல பொள்ளாச்சி ஜெயம்னு ஒருமாமி இருந்தா. முக்கால்வாசி நாள், அந்த மாமி, மடத்துல தான் இருப்பார். உடனே மாமி கிட்ட பெரியவா, ‘நான் தானே வார்த்தை கொடுத்தேன். அதைக் காப்பாத்த வேண்டாமா? ஒரு பத்து ரூபா கொடுங்கோ’ன்னார். உடனே மாமி பத்துரூபாயை எடுத்துக் கொடுத்தா. பெரியவா கேட்டு தான் கொடுப்பது எத்தனை பெரிய பாக்கியம்னு பூரிச்சுப் போய்ட்டா மாமி.

நான் அந்த ரூபாயை வாங்கி, பெரியவாகிட்ட கொடுக்க… பெரியவா அதைக் கிராமத்து பெரியவா கிட்டத் தந்தார். அந்தப் பெரியவர் சாஷ்டாங்கமா விழுந்து பெரியவாளை நமஸ்காரம் செய்தார். ரூபாயை வாங்கிக் கண்ல ஒத்திண்டார். அவர் முகம் முழுக்க சந்தோஷக் களை!

அந்தப் பெரியவர், அத்வைத தத்துவத்தை அப்படியே பாடலா, தமிழ்ல எழுதி, புஸ்தகமா செய்து எடுத்துண்டு வந்தது மஹா பெரியவாளை ரொம்பவே நெகிழ வைத்தது. புஸ்தகத்தை இனாமா கொடுத்தா, வாங்கிக்கிறவா அதைப் படிக்காம, அலட்சியமா வைச்சிடுவான்னு பெரியவாளுக்குத் தோணியிருக்கணும்….

அதே நேரம்… கிராமத்துப் பெரியவருக்கு பணநஷ்டமும் ஆயிடக்கூடாதுன்னு பெரியவாளுக்கு அக்கறை…. அதான் பெரியவா!