சிகை இல்லாமல் சம்ஸ்கிருதத்தில் பேசவேண்டாம்

“சிகை இல்லாமல் சம்ஸ்கிருதத்தில் பேசவேண்டாம்..”

(கிராப்புத்தலை குடுமியான ஸ்வாரஸ்ய கதை)

(சற்று நீண்ட பதிவு-ஆனால் அதி ஸ்வாரஸ்யம்)

சொன்னவர்;ஸ்ரீமதி மைதலி,காஞ்சிபுரம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

என் தகப்பனார் ஸ்ரீ சிவசுப்ரமண்ய சாஸ்திரிகள்
காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில், ஹிந்தி
விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

ஹிந்தி மொழிப் புலமை வயிற்றுப்பாட்டுக்கு
உதவிற்று. ஆனால் சிறு வயதில்,அவர் வேத
பாடசாலையில் அத்யயனம் செய்திருக்கிறார்.
சம்ஸ்கிருதம் பயின்று, தேர்வுகளில் நிறைய
மதிப்பெண் பெற்று தங்கமெடல் வாங்கியிருக்கிறார்.

சம்ஸ்கிருதம் படித்தவர்களிடம் மகாப்பெரியவாளுக்கு
அலாதிப் பிரியம் உண்டு. தரிசன காலங்களில்
சிறு சலுகைகளும் உண்டு.

1956ல்,அப்பா, கல்லூரி வேலையில் சேர்ந்தார்.

முதன்முதலாகப் பெரியவாள் தரிசனத்துக்கு
மடத்துக்குப் போனார். கூட்டம் அதிகமில்லை.

அப்பாவுக்கு அருமையான சந்தர்ப்பம். தன்னுடைய
வடமொழிப் புலமையை வெளிப்படுத்தி,பெரியவாளிடம்
அங்கீகாரம் பெறத்துடித்துக் கொண்டிருந்தார்.
பொன்னான வாய்ப்பை நழுவ விடுவாரா?

“அஹம் சிவசுப்ரமண்ய சாஸ்திரி,பச்சையப்பன்
மஹாவித்யாலயே..”

பெரியவாளின் பார்வை அவர் பேச்சுக்குத்
தடை போட்டாற் போலிருந்தது.

ஆமாம். தடைதான்.

“சிகை இல்லாமல் சம்ஸ்கிருதத்தில் பேசவேண்டாம்..”
என்று, கடுமையான உத்திரவு.

அப்பா, ஸ்தம்பித்துப் போய்விட்டார்.
அவர் அப்போது,கிராப்புத் தலை.
கிராப்புத் தலைக்குள் வடமொழி வாடிப் போய்விடுமா?

அப்பாவுக்கு இளமை முறுக்கு.வந்ததே கோபம்!

“சுவாமிகள்,என்ன இப்படி, சொல்லிவிட்டார்கள்!
பெரியவாளுக்கு இவ்வளவு உஷ்ணமாகப் பேச
தெரியுமா என்ன?….சரி, தரிசனத்துக்குப் போனால்தானே
இந்த சிகைப் பிரச்சினை? வேண்டாம் இந்த ஊரில்
ஆயிரம் கோவில்கள் இருக்கின்றன. தெய்வ தரிசனம்
செய்யவேண்டும் போலிருந்தால், கோவிலுக்குப்
போகிறேன்? மடத்துக்குப் போகணுமா,என்ன?”

பல வருஷங்கள்–மடத்துப் பக்கம் தலைவைத்துப்
படுக்கவில்லை,என் அப்பா!

அம்மாவினால் அவ்வளவு வைராக்கியமாக இருக்க
முடியவில்லை.’காஞ்சீபுரத்தில் இருப்பதே
மகாப்பெரியவாளைதினமும்தரிசனம்
பண்ணுவதற்காகத்தானே? என்பாள்.
.

ஒரு தடவை அம்மாவுக்குப் பிரசாதம் கொடுக்கும்போது,
“அவனுக்கு என்மேலே கோபம்; குடுமி வைத்துக்கொள்-
என்றேன். வீம்பு வேண்டாம் தரிசனத்துக்கு வரச்சொல்லு”
என்று உத்திரவாகியது.

அப்புறம்,அப்பாவும் தரிசனத்துக்குப் போகத் தொடங்கினார். ஆனால் ஒவ்வொரு தடவையும்,சிகை விஷயம் மட்டும்நினைவுக்கு வராமல் இருப்பதில்லை.

ஒரு நாள் பெரியவாளே சொல்லிவிட்டார்கள்;
“நீ சிகை வைத்துக் கொள்ளணும்னுதான் என் அபிப்ராயம்.
அதனாலே சங்கடப்பட்டுண்டே இருக்காதே. உனக்கு எப்போ சௌகரியப்படுகிறதோ, அப்போ சிகை வெச்சுக்கோ…”

அப்பாவுக்கும் சமாதானமாகிப் போய்விட்டது.

ஆனால், சிகை விஷயம் மறைந்து போய்விடவில்லை.
அவ்வப்போது புகைந்து கொண்டு தான் இருந்தது.

பெரியவாளுக்கு டிரிக்கெல்லாம் தெரியும்.
‘நேரில் பார்த்துக் கேட்டால் தானே,இந்த சாஸ்திரிக்கு
கோபம் வருகிறது. அவனை வேறு விதமாக மடக்கிப்
போடுகிறேன் பார்!’

கனவில் வந்து பேச ஆரம்பித்து விட்டார்கள் பெரியவாள்.

அப்பா என்ன செய்வார்,பாவம்!

கனவு வராமல் தடுக்க முடியுமா?

நாளடைவில், பெரியவாளின் சொற்களில் மிரட்டல்
அதிகமாகிவிட்டது – கனவில்தான்.

“நான் உயிரோடு இருக்கும் வரை, நீ சிகை
வெச்சுக்கமாட்டே? அப்படித்தானே? உன்னை, நான்,
சிகையோடு பார்க்கக் கூடாதுன்னு பிடிவாதமா இருக்கே?..”

அப்பா வெலவெலத்துப் போய்விட்டார்.

இந்தக் கனவு தோன்றி,பொழுதுவிடிந்த நாளே க்ஷவரம்
செய்து கொள்வதற்கு ஏற்ற நாளாக இருந்தது.
(நாள்,நட்சத்திரம் பார்த்துத்தான் அப்பா முடி நீக்கம்
செய்து கொள்வார்; அது அவர் காலம்)
அமாவாசை அன்றைக்குக்கூட கன்னம் முடி மழித்தல்
கனஜோராய் நடக்கிறது.பித்ருக்கள் கண்ணை மூடிக்கொண்டு சகித்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மாதாந்திர தாகசாந்தி கூட கிடைக்காது,(இது our (நம்) காலம்)

சிகை வைத்துக்கொண்டாகிவிட்டது.- 1976ல்!
கல்லூரிக்குப் போகவேண்டுமே? அவமானம்,வெட்கம்–
என்று எத்தனையோ உணர்ச்சிகள்.

குனிந்த தலை நிமிராமல்,(ஆக்ஸிடென்ட் ஏற்படாமல்)
சைக்கிளில் ஏறிப்போனார், கல்லூரிக்கு.

“அட! என்னய்யா!….என்ன, ஆச்சு…?”

“பெரியவா ஆக்ஞை..”

கையெடுத்துக் கும்பிட்டார்கள்.கேலிக்கூத்தை எதிர்பார்த்துச்சென்றவருக்கு,ஏக மரியாதை;சென்றவிடமெல்லாம் சிறப்பு.

அப்பா,ரொம்ப நாள் கழித்துச் சொன்னார்;

“சிகை வைத்துக் கொண்டால் இவ்வளவு கௌரவம்
கிடைக்கும் என்று தெரிந்திருந்தால், நான் எப்போதோ
சிகை வைத்துக் கொண்டிருப்பேன்!”