இது தவனப் பூவின் குச்சி.

“இது தவனப் பூவின் குச்சி. உனக்கு உதவும்,
வைத்துக்கொள்”-காஞ்சி மகாப்பெரியவர்
வலையில் படித்தது.
“””சார்! என் பர்சில் தவனப்பூவின் குச்சி இருக்கும். அது
காஞ்சி மடத்தில் மகாபெரியவர் எனக்கு அளித்த பிரசாதம்,”
காஞ்சி சங்கரமடத்தில், மகாப்பெரியவர் பக்தர்களுக்கு வழக்கம் போல் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சுமங்கலி வந்தார். அவர் மகாபெரியவரிடம் ஆசி பெற்றார்.
பெரியவர் அவருக்கு பிரசாதம் வழங்கிய போது, அதில் பல பூக்கள் கலந்திருந்தன. அதில் “தவனம்’ என்ற பூவின் குச்சி சேர்ந்திருந்தது. இந்த பூவை தென்மாவட்டங்களில் “மரிக்கொழுந்து’ என்பர். அதுபற்றி அறியாத அந்தப்பெண், பெரியவரிடம், “”சுவாமி! இது என்னவென்று எனக்கு தெரியவில்லையே!” என்றார்.
“”இது தவனப் பூவின் குச்சி. உனக்கு உதவும், வைத்துக்கொள்,” என்றார் பெரியவர்.
அந்தப் பெண்ணும் பயபக்தியோடு அதைத் தன் பர்சில் வைத்துக் கொண்டார். பின், அந்தப்பெண் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களையெல்லாம் தரிசித்து விட்டு, திருநெல்வேலி செல்லும் பஸ்சில் ஏறினார்.
பஸ் சென்று கொண்டிருந்த போது தான், தனது பர்ஸ் காணாமல் போனது அவருக்கு தெரியவந்தது. உடனே, அவர் கண்டக்டரிடம் பர்ஸ் காணாமல் போனது பற்றி புகார் தெரிவித்தார். அவரது பக்கத்தில் இருந்த இன்னொரு பெண்ணின் நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமான வகையில் அமைந்திருந்தது.


எனவே, அந்தப் பெண்ணின் பையை சோதனையிட வேண்டும் என்று கண்டக்டர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். உள்ளிருந்து பர்ஸையும் எடுத்துவிட்டார்.
பர்ஸை எடுத்தவளோ, அது தன்னுடையது என்று வாதாடினாள்.
சமயோசித புத்தியுள்ள கண்டக்டர், நெல்லை பெண்ணிடம்,””இந்த பர்சுக்குள் நீங்கள் வைத்திருந்த பணம், நகை தவிர்த்த பொருள் ஏதாவது ஒன்றைச் சொல்லுங்கள்,” என்றார்.
திருடியவளால் ஏதும் சொல்ல முடியவில்லை.
நெல்லை சுமங்கலியோ, “”சார்! என் பர்சில் தவனப்பூவின் குச்சி இருக்கும். அது, காஞ்சி மடத்தில் மகாபெரியவர் எனக்கு அளித்த பிரசாதம்,” என்றார்.
கண்டக்டர் அதைத் திறந்து பார்த்த போது தவனக்குச்சி இருந்தது தெரியவந்தது. பர்ஸை .உடனடியாக அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். திருடியவளை போலீசில் ஒப்படைத்தார்.
நெல்லை சுமங்கலிக்கு அப்போது தான், மகாபெரியவர் தனக்கு பிரசாதம் அளித்ததன் காரணம் புரிந்தது.
தன்னை முழுமையாகச் சரணடைந்தவர்களைக் காப்பாற்றுவதில் மகாபெரியவருக்கு நிகரான மகான் யாருமே இல்லை.
அதனால் தான், வாழும் தெய்வமாக நம் நெஞ்சங்களில் அவர் நிலைத்திருக்கிறார்